15 March 2016 10:53 pm
ஐக்கிய நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள உலகத் தாய் மொழிகள் நாளையொட்டி மொழி உரிமை மற்றும் மொழிகள் சமனியத்திற்காகப் போராடும் இந்திய மொழிகளின் கூட்டமைப்பு சார்பில் தாய் மொழிகள் நாள் புது தில்லியில் கொண்டாடப் பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ள தாய்மொழிப் பற்றாளர்கள் தில்லி பத்திரிகையாளர்கள் சங்கத்தில் தாய்மொழிகள் வளர்ச்சி குறித்து கூட்டாகப் பேட்டியளித்தனர். இதில் கருநாடக மாநிலத்திலிருந்து ஜி.ஆனந்த், கணேசு சேத்தன், உமாகாந்தன் (கன்னடா) மேற்கு வங்காளத்திலிருந்து கர்கா சட்டர்ஜி (வங்காளம்), பஞ்சாபிலிருந்து ஜோகாசிங் விர்க் (பஞ்சாப்), தமிழ் நாட்டிலிருந்து ஆழி செந்தில் நாதன், மணிவண்ணன், ரவி சங்கர் (தமிழ்), மராத்திய மாநிலத்திலிருந்து ‘தமிழ் இலெமுரியா’ ஆசிரியர் சு.குமணராசன் (தமிழ்), ஹிமாகிரன் அனுகுலா (தெலுங்கு), கேரளாவிலிருந்து பி.பவித்திரன் (மலையாளம்), ஒரிசாவிலிருந்து சிறீபூசன் சாகு (கோசாலி), மகாராட்டிராவிலிருந்து தீபக் பவார் (மராத்தி) உள்ளிட்ட தாய்மொழிப் பற்றாளர்கள் பலர் கலந்து கொண்டு இந்திய நாட்டின் தேசிய மொழிகள் பாதுகாப்பு குறித்தும் இந்திய அரசின் தற்கால நடைமுறைகள் குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். இதில் குறிப்பாக 40 மொழியைச் சார்ந்த தாய்மொழிப் பற்றாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தில்லி – ஜந்தர் மந்தர் பகுதியில் தாய்மொழிக்காக தன்னுயிரை நீத்த மொழிப் போர் தியாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி வழிபாடும் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மொழி ஆர்வலர்களும் தாய்மார்களும் மாணவர்களும் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர். இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் பட்டியல் 8 இல் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டு, பிராந்திய மொழி பேசும் மக்கள் அனைவரும் தங்களின் தாய் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைக் காக்கும் பொருட்டு நீதித்துறை, நிருவாகத் துறை, சட்டத்துறை ஆகிய அனைத்திலும் தத்தம் தாய் மொழியிலேயே தொடர்பு கொள்ளும் வகையில் இந்திய அரசு போதிய நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களிலும் அனைத்து துறை கல்விக்கும் அந்தந்தப் பகுதி தாய்மொழியையே பயிற்று மொழியாகக் கொண்டு பயிற்றுவிப்பதற்கான ஆணையும் நிதியுதவியும் வழங்க வேண்டும். மத்திய அரசால் அல்லது மாநில அரசின் உதவியால் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் முதல் / இரண்டாவது / மூன்றாவது விருப்ப மொழியாக அம்மாநிலத்தின் முதன்மை (ஆட்சி) மொழி இருக்க வேண்டும். உயர் நீதிமன்றங்களின் வழக்காடு மொழி மற்றும் நடைமுறை மொழியாக அந்தந்த மாநிலத்தின் முதன்மை மொழியே திகழ வேண்டும். அனைத்து விதமான பொதுப் பாதுகாப்பு குறித்த அறிவிப்புகள், அறிக்கைகள் போன்றவை அச்சேவை வழங்கப்படும் மாநிலத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்தியாவில் ஒரு சில மொழிகள், குறிப்பாக ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம் போன்ற மொழிகளுக்கு முன்னுரிமை அளித்து இந்திய நாட்டின் பூர்வீக மொழிகளான தேசிய மொழிகள் படிப்படியாக நசுக்கப்படும் நிலை முற்றாக நீக்கப் பட வேண்டும். இந்திய மொழிகள் பாதுகாப்பிற்காக புதியதொரு மொழிப் பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தும் வண்ணம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17வது சரத்து மறு பரிசீலனை செய்யப் படவேண்டும். தாய்மொழிக் கல்வியின் அவசியம் குறித்து அரசின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப் படவேண்டும். இந்தி மொழி பரப்புரைக்காக இந்தியாவில் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து பிற மொழிகளின் பண்பாட்டு, வரலாற்றுக் கூறுகளை சிதைக்கப் படுவதை வெகுவாகக் கண்டிக்கிறோம். பல நூற்றாண்டு காலமாக பேசப்பட்டு வந்த பிராந்திய மொழிகள் பல வட இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் அழிக்கப்பட்டு வருவது குறித்து பெரிதும் கவலை அளிக்கும் ஒன்றாகும். எனவே இந்தியாவின் அனைத்து மொழிகளின் உரிமை மற்றும் சமன்பாட்டைக் காப்பாற்றும் வகையில் ஏற்கனவே உள்ள சட்ட சரத்துகளை முறையாக நடைமுறைப் படுத்துவதுடன், மொழிகள் சமனியம் குறித்து புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேற்கண்ட நிகழ்வுகளை இந்திய மொழிகள் சமனியம் மற்றும் உரிமையை முன்னெடுக்கும் அமைப்பு (Compaign for Language Equivality and Rights (CLEAR)) என்கிற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.