17 March 2015 8:48 pm
பெங்களூர்த் தமிழ்ச் சங்கமும் சென்னை அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் என்ற அமைப்பும் இணைந்து நடத்திய திருக்குறள் மாநாடு பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழிலக்கியம், திருக்குறள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பேராசிரியர் மின்னூர் சீனிவாசன், முனைவர் இளமாறன், புலவர் ஆதி.நெடுஞ்செழியன், ஏர்வாடி இராதா கிருட்டிணன், கி.சீனிவாசன், தமிழ் இலெமுரியா" முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். சிலம்பொலி செல்லப்பனாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் "சிலம்பொலி யார்?" என்ற ஆவணப் படமும் அறிமுகம் செய்யப்பட்டது. சிலம்பொலி செல்லப்பனார் தலைமையில் செவ்வியல் அறிஞர் பா.செகதீசன் "பெருங்கதை" குறித்து இலக்கிய ஆய்வுரை ஆற்றினார்.கல்யாண் பரத நாட்டிய வித்யாலா மாணவிகளின் பரத நாட்டியம் மற்றும் செல்வி ஸ்ரீமதி, செல்வி கல்யாணி ஆகியோரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழையும் சிறப்பு செய்த இம்மாநாட்டில் தமிழறிஞர்கள் பலருக்கு சிறப்பு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. வெளி மாநிலத்தில் தமிழ்ப் பணியாற்றி வரும் "தமிழ் இலெமுரியா" முதன்மை ஆசிரியர் சு.குமணராசனுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அமிழ்தத் தமிழ் ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளவரசு அமிழ்தன் சிறப்பாகச் செய்திருந்தார்."