மொழி உரிமையை காப்பதற்காக இந்திய மாநிலங்களின் மொழி உணர்வாளர்கள் கூட்டமைப்பு தொடக்கம் - தமிழ் இலெமுரியா

16 March 2014 12:41 am

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் பல்வேறு தனித்தனி தேசிய இனங்கள் வெவ்வேறு மொழியைப் பேசி வருகின்றனர். எனினும், இந்தியாவின் மொழிக் கொள்கை என்பது ஒரு சில குறிப்பிட்ட மொழிகளுக்கு மட்டுமே ஆதரவாகவும், பெரும்பான்மையாக உள்ள பன்மொழி தேசிய இன மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு தத்தம் மொழிகளின் உரிமையைக் காக்க கூட்டமைப்பு ஒன்று தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அய்.நா. மன்றம் தாய்மொழி தினமாக பிப்ரவரி 21ஆம் நாளை அறிவிப்பதற்குக் காரணமாக விளங்கிய வங்காள மொழி அறிஞர் முனைவர் டி.என்.மண்டல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் இந்தியாவில் பல்வேறு மாநில மொழி அறிஞர்கள், ஆர்வலர்களும் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். இவ்வமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகச் சந்திப்பில் வங்காளம், கன்னடம், ஒரிசா, தமிழ், பஞ்சாப், மைதிலி, கொசாலி, உருது போன்ற மொழிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில்நாதன் செயல்படுகின்றார். இந்நிகழ்வில் இராகவேந்திரா, பிரசாத் மேகர் ஆகியோர் உண்மையான கூட்டாட்சி தத்துவம் இந்தியாவில் மலர வேண்டுமானால் இந்திய மொழிகளின் உரிமையும், சமன்பாடும் காக்கப்படும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இது குறித்து ஒரு வரைவு அறிக்கை தயார் செய்து அனைத்து மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளர் வளர்மதி, டாக்டர் டி.மன்ஜித், பஞ்சாபி லோக் மன்ச் பொதுச் செயலாளர் டாக்டர் பிரித்திவிராஜ் தாபர், அனைத்து பெங்காலி வெளியீட்டாளர்கள் சங்க தலைவர் சுனந்தன் ராய் சௌத்திரி, கொசாலிக் கவிஞர் பிரசாந்த் குமார் மெகார், எழுத்தாளர் வீரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி