15 October 2013 1:07 am
ஃபைலின் புயலால் பீகாரில் பலத்த மழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபைலின் புயல் கடந்த சனிக்கிழமை ஒடிசாவை தாக்கியது. இதனால் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. மரங்கள், வீடுகள் இடிந்து விழுந்தும் வெள்ளத்தில் சிக்கியும் 25 பேர் இறந்தனர். ஒடிசாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறது. புயல் தாக்கிய கஞ்சாம் மாவட்டம் கோபால்பூரில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் நவீன் பட்நாயக் கோபால்பூர் சென்று வெள்ளச் சேதத்தை பார்வையிட்டார். காரில் செல்ல முடியாத இடங்களை விமானத்தில் சென்று பார்வையிட்டார். பின்னர், அவர் புயல் தேச நிலவரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விளக்கினார். மின்சாரத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் மத்திய அரசின் எரிசக்தி நிறுவனங்களின் மூலம் உதவி வழங்குமாறு கேட்டுக் கொண்டார். பாலாசூர் மாவட்டத்தில் 2½ லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாநிலத்திலேயே இங்குதான் வெள்ள நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது என்றும், அங்கு ராணுவம், கடற்படை, விமானப்படையுடன் தேசிய பேரிடர் மேலாண்மை வீரர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஃபைலின் புயலால் ஆந்திர மாநிலம் சிறிகாகுளம் மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இயல்புநிலை திரும்ப இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே ஃபைலின் புயலால் அவுரா– விசாகப்பட்டினம் வழித்தடத்தில் பாதிக்கப்பட்டு இருந்த ரெயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கியது. சென்னையில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்கோல் நகருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. ஒடிசாவை தாக்கிய ஃபைலின் புயல் அங்கு பலத்த சேதத்தை ஏற்படுத்திய பின்பு வலு இழந்தது. பின்னர் சத்தீசுகர், பீகார், மேற்கு வங்காள மாநிலங்களை நோக்கி நகர்ந்து அங்கு பலத்த மழை கொட்டியது. ஃபைலின் புயல் காரணமாக பீகார் மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்குள்ள கோசி, கன்டாக் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மாதேபுரா மாவட்டத்தில் மழை காரணமாக வீடு இடிந்ததில் 70 வயது முதியவர் உயிரிழந்தார். முதலமைச்சர் நிதிஷ்குமார் மழை சேதம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரித்து இருப்பதால் வெள்ள நிவாரணப் பணிகளை முடுக்கி விடுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் கலெக்டர்களுடன் பேசி மீட்பு நடவடிக்கைகளை தனது அலுவலகத்தில் இருந்தவாறே பார்வையிட்டு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதேபோல் மேற்கு வங்காள மாநிலம் மேற் மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.