28 July 2015 10:04 am
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் தனது 83ஆவது வயதில் திங்கட்கிழமை இரவு காலமானார். தமிழகத்தின் தெற்கே இராமேஸ்வரத்தில் 1931 இல் பிறந்த அவர் இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்தியாவின் அணுத்திட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக நாட்டின் அதியுயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்ட அவர் அடுத்த ஐந்தாண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார். இந்தியாவின் வடகிழக்கில் உள்ள ஷில்லாங் நகரில் இந்திய மேலாண்மைக் கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்தார். திருமணம் செய்யாமல் கடைசிவரை வாழ்ந்த அப்துல் கலாம் அவர்களின் மறைவு குறித்து பல முன்னணி அரசியல்வாதிகளும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். காலஞ்சென்ற அப்துல் கலாம், ’மக்களின் குடியரசுத் தலைவர்’ என்றும், இளைஞர்களின் உற்ற நண்பர் என்றும் பரவலாக பாராட்டப்பட்டார். பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்குச் சென்று, எதிர்கால இந்தியாவை உருவாக்குவது தொடர்பில் இளைஞர்களிடம் உரையாற்றி வந்தார். திங்கட்கிழமை காலை அவர் ஷில்லாங் செல்வதற்கு முன்னதாக அந்தப் பயணம் குறித்து அவர் ட்விட்டர் குறுஞ்செய்தி மூலம் அறிவித்திருந்தார். அவர் அண்மையில் இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போது யாழ்ப்பாணத்திலும் ஒரு கூட்டத்தில் பங்கேற்றார்.