அம்பேத்கர் பற்றிய பாடம் நடத்த எதிர்ப்பா? பிஞ்சு மனதில் சாதிய உணர்வா? - தமிழ் இலெமுரியா

13 September 2014 12:34 am

கடந்த வாரம் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள சீ.ரா. அரசு மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர் மீது வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பாக, அதே பள்ளிக்கூடம் தொடர்பாக மற்றொரு சர்ச்சை உருவெடுத்துள்ளது. அந்தப் பள்ளிக்கூடத்தில், இந்திய அரசியலமைப்பு  நிர்ணய சபையின் தலைவராக இருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குறித்த பாடங்களை நடத்துவதற்கு சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் கேட்டபோது, அம்பேத்கர் குறித்த பாடத்தை ஆசிரியர் நடத்தினால், சில சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சத்தம்போட்டு பாடம் நடத்த விடாமல் செய்வார்கள் என்று தெரிவித்தார்.மாணவர் வெட்டப்பட்ட பிறகு செப்டம்பர் 5ஆம் தேதி நடந்த அமைதிக் கூட்டத்தில் அம்பேத்கர் குறித்த பாடம் நடத்த முடியால் இருப்பது குறித்த தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.குழந்தைகளிடம் ஜாதி உணர்வா? இது குறித்து மதுரையிலிருந்து செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான எவிடன்ஸ் அமைப்பின் கதிரிடம் பேசியபோது, ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்கள் இப்படி எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் எனில் இந்தப் பகுதிகளில் குழந்தைகள் மனதிலேயே ஜாதி உணர்வு ஊட்டப்பட்டிருக்கிறது என்று தெளிவாகிறது எனக் கூறினார். அம்பேத்கர் குறித்த பாடங்களை நடத்தவிடாமல் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாக கூறப்படுவது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயகுமாரிடம் கேட்டபோது, இப்படி சம்பவங்கள் நடந்ததாக சிலர் கூறியிருப்பதாகவும், அப்படிச் செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்கு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஆனால், இந்தப் பகுதிகளில் குழந்தைகள் மிகச் சிறிய வயதிலிருந்தே ஜாதி உணர்வோடு வளர்க்கப்படுவதே இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்கிறார்கள்.. திருத்தங்கல் பள்ளியில் நடக்கும் சம்பவங்கள் ஒரு உதாரணம் மட்டுமே என்று குறிப்பிடும் சமூக ஆர்வலர்கள், இப்பகுதியில் நிலவும் ஜாதிப் பாகுப்பாட்டை நீக்க பாடத்திட்டத்திலேயே தீண்டாமை ஒழிப்பு இடம்பெற வேண்டும் என்கிறார்கள். தவிர, வேறு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்களை இங்கிருக்கும் பள்ளிக்கூடங்களில் நியமிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி