7 January 2014 5:31 am
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் புலிக் கொடி காண்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஹிப்பொப் இசைக் கலைஞர்கள் இருவர் இவ்வாறு புலிக் கொடியை ஏந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். டெட் பிரிஸ் என்ற அமெரிக்க ஹிப்பொப் இசைக் குழுவினரே இவ்வாறு புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளனர். புத்தாண்டை வரவேற்றும் முகமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த இசைக் கலைஞர் மேடையில் புலிக் கொடியுடன் தோன்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புலிக்கொடியுடன் மேடையில் தோன்றியதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை பாராட்டிப் பேசியுள்ளனர். போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் புலிகளின் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த ரசிகர்களிடம் புலிகளுக்கு ஆதரவு திரட்டியுள்ளனர். போர் இடம்பெற்ற காலத்தில் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.