16 February 2016 11:18 pm
இந்தியா முழுவதும் நடைபெற்ற எட்டு மாநில இடைத் தேர்தல்களில் தேசிய சனநாயக கூட்டணி போட்டியிட்ட 12 இடங்களில் 7 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் காலியாக இருந்த சட்டசபை தொகுதிகள் பலவற்றுக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் பெரும்பாலான இடங்களில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் விவரம் : உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகர் தொகுதியில் பா.ச.க வேட்பாளர் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டியோபேன்ட் தொகுதியில், போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 3400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவ்விரு தொகுதிகளிலும் ஆளும் சமாஜ்வாதி கட்சி தோல்வியடைந்துள்ளது. பஞ்சாப்: பஞ்சாப்பிலுள்ள காதூர் சாகிப் தொகுதியில், பா.ச.க தோழமை கட்சியான ஷிரோன்மணி அகாலிதளம் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகம்: கர்நாடக மாநிலம் ஹெப்பால் தொகுதியில் பாஜக வேட்பாளர் நாராயணசாமி, 19,149 வாக்குகள் வித்தியாசத்திலும், தேவதுர்காவில், பாஜக வேட்பாளர் சிவனகவுடா நாயக் 16,871 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றியை தனதாக்கி கொண்டனர். பீதர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ரஹீம்கான், 22,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மகாராட்டிரம்: மகாராட்டிரம் மாநிலம் மும்பை புறநகர் பகுதியில் உள்ள பல்ஹர் பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பா.ச.க அரசுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேவனை கட்சி வெற்றி பெற்றது. மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள மைஹர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மணீசு படேலைவிட அதிக வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் நாராயண் திரிபாதி வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியை வைத்து பார்க்கும் போது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மோடி பாராட்டு: இடைத்தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி கூறுகையில், மக்கள் அரசியல் மீது வைத்துள்ள நம்பிக்கையை இந்த வெற்றி காட்டுகிறது. வெற்றிக்காக பாடுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணியினரின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது. மேலும் நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மக்களுக்கு நன்றி கூறுவதாகவும் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.