16 May 2016 11:56 am
இத்தாலியில் தம்பதிகள் மிகுதியானக் குழந்தைகளை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் புதிய திட்டம் ஒன்றை இத்தாலிய சுகாதார அமைச்சர் பீட்ரிஸ் லோரென்ஸின் பரிந்துரை செய்துள்ளார்.இத்திட்டத்தின்படி தற்போது குழந்தைகளின் பராமரிப்புக்காக மாதந்தோறும் அரசாங்கம் கொடுக்கும் நிதியுதவியை இரட்டிப்பாக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தாலியில் மகப்பேற்று விகிதம் தற்போதுள்ள போக்கிலேயே தொடருமானால் அடுத்து வரும் 10 ஆண்டுகளில் அது 2010ஆம் ஆண்டில் இருந்ததை விட 40 சதவீதம் குறைவானதாகக் காணப்படும் என்று லா ரிபப்ளிகா என்ற செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் லோரென்ஸின் தெரிவித்தார்.இத்தாலியில் வயதான மற்றும் கடும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கும் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் அத்துடன் நாட்டின் மகப்பேற்று விகிதமும் அபாயகரமான அளவுக்கு தொடர்ந்து குறையுமானால் ஒட்டுமொத்த நாடும் முற்றாக செயலிழந்து தடுமாற்றம் அடையும் என்று எச்சரித்துள்ளார்.குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மாதாமாதம் 90 டாலர்கள் குழந்தை ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை இரட்டிப்பாக்குவதோடு கூடுதல் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் மேலும் அதிகமான அளவு உதவித்தொகை வழங்கப்படும் என்று இவரது புதிய திட்ட வரைவு தெரிவிக்கிறது.