இந்தியாவில் வீடற்ற ஏழை எளிய மக்கள் வசிப்பதற்கு முகாம்கள்- இந்திய உச்ச நீதி மன்றம். - தமிழ் இலெமுரியா

17 November 2014 12:13 pm

இந்தியாவில் வீடற்ற ஏழை எளிய மக்கள் வசிப்பதற்கு தேவையான பாதுகாப்பான முகாம்களை ஏற்படுத்தி கொடுப்பதற்காக, இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு மூன்று வார காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்ற இது தொடர்பான வழக்கு விசாரணையில் இன்று வியாழனன்று வெளியிடப்பட்ட உத்தரவில், மத்திய அரசு இன்னும் 10 நாட்களுக்குள் இது தொடர்பிலான அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடனான கூட்டத்தை கூட்டவும் கூறியுள்ளது. அந்த கூட்டத்திற்கு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் அழைப்பு விடுக்க கூறி அறிவுறுத்தியுள்ள அந்த அமர்வு, அப்போது இது தொடர்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை குறித்தான விளக்கத்தை பெறவும் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில், அரசாங்கம் போதுமான முகாம்களை ஏற்படுத்தித் தருவதில்லை என்றும், முன்னதாக அமைக்கப்பட்ட சில முகாம்களில் கூட சரியான வசதிகள் செய்யப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் கூட குறைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நகரப்பகுதிகளில் இது போன்ற முகாம்களை அமைக்கும் போது, அவை மிக அதிக தூரத்தில் அமைக்கப்படுவதாகவும், தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக நகரத்தின் மையப்பகுதிக்கு சென்று வர போக்குவரத்து வசதி போதாக் குறையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் இந்த வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதாடிய போது, இது தொடர்பில் தில்லி அரசாங்கம் வெளியிட்டுள்ள ஒரு கணக்கெடுப்பை முன்வைத்தார். அதன்படி தில்லியில் மட்டும் 39,000 பேர் வீடற்று வாழ்வதாகவும், ஆனால் அரசாங்கத்தால் அங்கு 17,000 பேருக்கு மட்டும் தான் பாதுக்காப்பு முகாம்களை ஏற்படுத்தி தர முடியும் என்று கூறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். இத்தகைய சூழலில் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்று தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று கூறிய உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி