18 February 2014 5:31 am
இந்திய மீனவர்களை தனது நாட்டுக் கடற்படை வீரர்கள் இருவர் கொலை செய்த வழக்கின் விசாரணை மிகவும் தாமதமாக நடப்பதாக கூறி தனது நாட்டுத் தூதரை இத்தாலி திரும்பப் பெற்றுள்ளது. இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் மீதான வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த வழக்கின் சட்ட நடவடிக்கைகள் மிகவும் தொய்வடைந்திருப்பதாகவும், மிகவும் மெதுவாக நடப்பதாகவும் கூறி தனது அதிருப்தி மற்றும் எதிர்ப்பைக் காட்டும் வகையில் இந்த அறிவி்ப்பை வெளியிட்டுள்ளது இத்தாலி. இத்தாலியின் தூதராக இதுவரை டேணியல் மன்சினி இருந்து வந்தார். தற்போது தனது நாட்டு அரசின் முடிவுப்படி அவர் உடனடியாக இத்தாலி திரும்புகிறார். இதுகுறித்து இத்தாலி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு மிகவும் மெதுவாக நடத்தப்படுகிறது. இது இரு நாட்டு உறவுகளிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த தாமதத்தை ஏற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் மாசிமிலியானோ மற்றும் சால்வடேர் கிரோன் ஆகிய இருவரும், கடந்த 2012ம் ஆண்டு சரக்குக் கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய கடல் எல்லைக்குள், கேரளா அருகே தங்களை நோக்கி வந்த இந்திய மீன்பிடி படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இந்திய மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்தனர் காவல்துரையினர். பின்னர் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. அதன் பின்னர் நாடு திரும்பிய இருவரும் தற்போது விசாரணைக்காக டெல்லியில் உள்ள இத்தாலி நாட்டுத் தூதரகத்தில் தங்கியுள்ளனர். தூதர் திரும்பப் பெறப்பட்டது தொடர்பாக இத்தாலி வெளியுறவு அமைச்சர் எம்மா பொனினோ கூறுகையில், இந்தியாவால் இந்த வழக்கை நடத்த முடியவில்லை என்பது நிரூபணமாகியு்ளது. எனவே சர்வதேச சட்டப்படி இந்த வழக்கை இத்தாலியே எதிர்கொள்ளும். எங்களது இறையாண்மையை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறினார். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இரு கடற்படை வீரர்களையும் நாட்டுக்குத் திரும்ப அழைக்க முயற்சிப்போம் என்றும் எம்மா கூறினார். இதற்கிடையே, இத்தாலி வீரர்கள் மீதான வழக்கு பிப்ரவரி 24ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.