18 January 2016 10:01 am
இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டுள்ளது, தமது நாட்டுக்கும் இதர உலகத்துக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது என அதிபர் ஹஸன் ரௌஹானி கூறியுள்ளார். சர்வதேச அணுசகதி கண்கணிப்பு அமைப்பு, இரான் தனது அணுசக்தி செயல்பாடுகளை மட்டுபடுத்தியுள்ளது என்பதை உறுதிசெய்த பிறகு, அது தொடர்பில் இரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. இதன் பிறகு நாட்டின் நாடாளுமன்றத்தின் உரையாற்றியபோதே அதிபர் ரௌஹானி இதைத் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள உடன்பாடு குறித்து அனைவரும் மகிழ்கின்றனர் எனக் கூறும் இரானிய அதிபர், தமது பிராந்தியத்தில் போரை விரும்பும் சிலர் மட்டுமே இதை எதிர்த்துள்ளனர் எனக் கூறுகிறார். இஸ்ரேலும், அமெரிக்க நாடளுமன்றத்தில் உள்ள கடும்போக்கு சிந்தனையாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அச்சுறுத்தல் இப்போது குறைந்துள்ளது என்றாலும், தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை என அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.