இலங்கையில் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது அந்த நாட்டு அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் தலையீட்டால் ஒப்பந்தம் எட்டப்படவில்லையென தமிழக மீனவப் பிரதிநிதிகள - தமிழ் இலெமுரியா

18 May 2014 7:58 am

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள பாக்கு நீரிணையில் மீன் பிடிப்பது தொடர்பாக தமிழக மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிகழ்ந்துவரும் நிலையில், இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண, இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் இடையிலான முதற் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இலங்கையின் தலைநகர் கொழும்புவில் மே 12ஆம் தேதியன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தைகளின்போது, 90 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என இலங்கைத் தரப்பு கூறியது. ஆனால், இந்த நிபந்தனையை இந்திய மீனவர்கள் தொடர்ந்து மீறிவருவதாக இலங்கை மீனவர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டினர். பிறகு தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் எல்லை தாண்டி மீன்பிடிப்பதையும், இழுவலைகளை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதையும் ஏற்கவில்லை என இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையெல்லாம் மாற்றிக்கொள்ள கால அவகாசம் கேட்டபோது, ஏற்க மறுத்த இலங்கை மீனவர்கள் நீண்ட விவாதத்திற்குப் பிறகு ஒப்புக்கொண்டதாகவும் இந்திய மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். சுருக்குவலை, இரட்டை மடிவலை ஆகிய வலைகளைப் பயன்படுத்த ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் தடைவிதித்திருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தாங்கள் ஒத்துழைப்போம் என்றும் தமிழக மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். ஆனால், மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்ள கால அவகாசம் கேட்டபோது, அதற்கு இலங்கை மீனவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் அதகாரிகள் மறுப்புத் தெரிவித்தாக தேசிய மீனவர் பேரவையின் தலைவரான இளங்கோ, பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்த நிலையில், கொழும்புவில் இருந்து இந்திய மீனவப் பிரதிநிதிகளைத் தொடர்புகொண்ட இலங்கை மீனவர்கள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து நம்பிக்கை தெரிவித்ததாகவும் விரைவில் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்த நடக்கும் என தாங்கள் நம்புவதாகவும் இந்திய மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி