இலங்கை மனித உரிமைகள் விசாரணை அறிக்கை: 6 மாதம் ஒத்திவைப்பு - தமிழ் இலெமுரியா

17 February 2015 7:30 pm

இலங்கையின் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்டம்பர் 2015வரை ஒத்திவைப்பதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒரு முறை மட்டுமே தாம் இதனை ஒத்திவைப்பதாக அவர் வலியுறுத்தினார். இலங்கையில் மாறி வரும் நிலைமைகளில் இந்த அறிக்கையை பலப்படுத்தும் வகையில் மேலும் ஆதாரங்கள் கிடைக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னைய அரசைப் போலல்லாது இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் குறித்த பல விடயங்களில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள நிலையில், அவர்களது கடப்பாடுகளை யதார்த்தமாக்க தனக்கு இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னைய ஆணையரான நவி பிள்ளை அவர்களுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மூன்று நிபுணர்களும் இந்த கால நீடிப்பு அவசியமானது என்று தனக்கு கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சியம் வழங்கியவர்களும், இந்த காலநீடிப்பு இதனை நீர்த்துப்போகச் செய்யும் விடயமாக எண்ணி அச்சம் கொள்ளலாம் என்ற யதார்த்த்த்தை தான் ஏற்பதாக கூறியுள்ள அவர், ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கான பலமான குரலாக தாம் ஒலிப்போம் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.ததேகூ கருத்து ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் இந்த முடிவு தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா.சம்பந்தன் கருத்து தெரிவித்தார். இலங்கையின் புதிய அரசு இந்த விடயத்தில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்துவதாக உறுதியளித்து, விசாரணை அறிக்கையை வெளியிடுவதை ஒத்தி வைக்கக் கோரியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். இந்த விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு என்பது, இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் புதிய விடயங்களை விசாரணைக் குழுவின் முன்னர் வைக்கவும் வழிவகுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். எனவே இந்த காலகட்டத்தில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலுடன் ஒத்துழைப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி