உக்ரைனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது கிரீமியா - தமிழ் இலெமுரியா

12 March 2014 5:12 am

சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. இங்குள்ள கிரீமியா ரஷியாவை ஒட்டியுள்ளது. இங்கு வாழ்பவர்களில் 65 விழுக்காட்டினர் ரஷியர்கள். இப்பகுதி தன்னாட்சி உரிமை பெற்றது. தற்போது இது உக்ரைனிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்துள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தற்போது மோதல் முற்றியுள்ளது. இந்த நிலையில், ரஷியாவுக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர் கிரீமியர்கள். சமீபத்தில் உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிரீமியா பகுதியை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்தது. அதற்கு கிரீமியா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  தற்போது அங்குள்ள பாராளுமன்ற கட்டிடம், மற்றும் அரசு அலுவலகங்களில் ரஷிய தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. அதை ரஷியா கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையே உக்ரைனிடம் இருந்து விடுதலை பெற்று ரஷியாவுடன் இணைய கிரீமியா விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கான தீர்மானம் கிரீமியா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டு எம்.பி.க் களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து கிரீமியா உக்ரைனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  மேலும், ரஷியாவுடன் கிரீமியா இணைய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்த வாக்கெடுப்பு வருகிற 16 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கிடையே, பதவி நீக்கம் செய்யப்பட்டு தற்போது ரஷியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் ரோஸ்டவ் ஆன், டான் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "நான்இன்னும் உக்ரைனின் அதிபராகவும், உத்தரவு வழங்க கூடிய தலைமை பதவியிலும் இருக்கிறேன். நான் இன்னும் நீண்ட நாட்கள் இங்கு இருக்க போவதில்லை. உக்ரைன் தலைநகரான கீவுக்கு செல்வேன். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை "என்றார். இதற்கிடையே கிரீமியா சுதந்திரம் பெற்ற பகுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கிரீமியா பாராளுமன்றத்தை கலைத்து விடுவோம் என உக்ரைன் அரசு மிரட்டி உள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி