கச்சத்தீவு தேவாலய கட்டுமானம் இந்திய அழுத்தத்தால் நிறுத்தப்படவில்லை - தமிழ் இலெமுரியா

16 May 2016 12:06 pm

இலங்கை – இந்தியாவுக்கிடையே உள்ள கச்சத்தீவில் இலங்கைக் கடற்படையினரால் இடித்து மீளக் கட்டப்பட்டுவரும், புனித அந்தோணியார் தேவாலய கட்டுமானப் பணிகள் இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.கால நிலை உட்பட சில காரணங்களுக்காக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாகவும், அது விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் கடற்படை பேச்சாளர் கேப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார். யாழ் ஆயர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கச்சத் தீவிலுள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தை இடித்து மீளக்கட்டும் பணிகள் கடந்த வாரம் கடற்படையினரால் ஆரம்பிக்கப் பட்டதாகவும் அதற்கான அடித்தளம் போடப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.எனினும் அங்கு தற்போது பெய்துவரும் கடும் மழை கட்டுமானப்பணிகளை தொடர்வதற்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்த கேப்டன் அக்ரம் அலவி, நிர்மாணப் பணியை தொடர்வதற்கு அடித்தளம் காயும் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாக கூறினார்.இந்த இரண்டு காரணங்களினாலேயே தேவாலய கட்டுமானப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்நடவடிக்கை விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.தேவாலய கட்டுமானப் பணி எப்போது முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த கடற்படை பேச்சாளர், கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் தேவாலயம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் கச்சத் தீவிலுள்ள தேவாலயத்தை கட்டும் நடவடிக்கையில், தமிழ்நாடு அரசு தரப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.அதன் பின்னர் தேவாலய கட்டுமானப்பணிகள் இந்தியாவின் அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகிருந்தன. இந்த பின்னணியில் இலங்கைக் கடற்படைப்பேச்சாளர்  இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி