கவலைக்கிடமான நிலையில் தமிழக விவசாயிகள்; விரைந்து செயலாற்றுமா அரசு? - தமிழ் இலெமுரியா

14 January 2017 8:33 pm

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆழங்காத்தான் ஊராட்சியில் வசிக்கும் செந்தமிழன், பயிர்களைப் பார்ப்பதற்காக புறப்பட்டபோது தேநீரைக் குடித்துவிட்டுப் போகும்படி சொன்னார் அவரது மனைவி மல்லிகா. வீட்டிற்குப் பின்னால் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் தனது நிலத்திற்குச் சென்ற செந்தமிழன், தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்களைப் பார்த்து கொண்டிருந்தார். சில நிமிடங்களில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தவர் அங்கேயே இறந்துபோனார்.சுமார் 6 ஏக்கர் நிலம் அவருக்கு இருக்கிறது. ஆனால், இந்த முறை காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால், மழையை மட்டும் நம்பி கடன் வாங்கி மூன்று ஏக்கரில் விதைத்தார் செந்தமிழன். ஆனால், மழையும் பொய்த்துப் போகவே பாதியளவு விளைந்த பயிர்கள் கருக ஆரம்பித்தன.இப்போது அவர் விவசாயத்திற்காக வாங்கிய கடன், டிராக்டர் வாங்கிய கடன் எல்லாம் அவரது குடும்பத்தின் மீது அழுத்திக்கொண்டிருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகனையும், மாற்றுத்திறனாளியான மகளையும் வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கிறார் மல்லிகா.இது வெறும் செந்தமிழன் குடும்பத்தின் கதை மட்டுமல்ல. புதுக்குடி கிராமத்தின் அசோகன், தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த முருகையன் என டெல்டா பகுதியில் விவசாயம் பொய்த்துப் போனதால் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு நூறைத் தாண்டுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வழக்கமான அளவைவிட 62 சதவீதம் குறைவாகப் பெய்திருப்பது, காவிரியில் போதுமான நீர் திறக்கப்படாதது ஆகிய காரணங்களால், விவசாயத்திற்காக முழுவதுமே காவிரியை நம்பியுள்ள தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் இந்த ஆண்டு கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளன.விவசாயிகளை ஏமாற்றிய மழைதமிழகம் முழுவதும் சராசரியாக 62 சதவீதம் அளவுக்குக் குறைவாக பெய்த மழை, கடலூர், நாமக்கல் மாவட்டங்களில் 80 சதவீதம் அளவுக்குக் குறைவாகப் பெய்தது. காவிரி நீர் உரிய காலத்தில் திறக்கப்படாததால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே குறுவைப் பயிர்களைச் சாகுபடி செய்வது பாதிக்கப்பட்டிருந்தது.இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்திலிருந்து காவிரியில் திறந்துவிட வேண்டிய நீரும் உரிய காலத்தில் உரிய அளவில் திறந்துவிடப்படவில்லை. இது தொடர்பாக செப்டம்பரில் புதுதில்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டிற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய உரையில் செப்டம்பர் இறுதிவரை தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரில் சுமார் 76 டிஎம்சி தண்ணீர் வரவில்லை என்று குறிப்பிட்டார்.தமிழகத்தை வஞ்சித்த கர்நாடகஉச்ச நீதிமன்றம் இது தொடர்பாக செப்டம்பர் மாதத்தில் பல உத்தரவுகளை கர்நாடக அரசுக்குப் பிறப்பித்தது. இருந்தபோதும் காவிரியில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்காக மிகத் தாமதமாக செப்டம்பர் மாதத்தில்தான் தண்ணீர் திறக்கப்பட்டது.திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரியில் சில பகுதி என டெல்டா பகுதியில் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரை நம்பியிருக்கின்றன. அணையில் நீர் இருப்பு மிகக் குறைவாகவே இருந்ததால், இந்த ஆண்டு கடைமடைப் பகுதிகளில் உள்ள ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேலான நிலத்தில் விவசாயப் பணிகளே துவங்கப்படவில்லை.ஆழ்துளை கிணற்றை நம்பி பாசனம் மேற்கொள்ளப்பட்டு வரும் 3 லட்சம் ஏக்கர் அளவிலான நிலங்களைத் தவிர பிற பகுதிகளில் நேரடி நெல் விதைப்பை விவசாயிகள் மேற்கொண்டனர். ஆனால், நவம்பர் மாத இறுதியில் மேட்டூர் அணயில் நீர்மட்டம் முழுமையாகச் சரிந்ததால் அணையிலிருந்து நீர் திறப்பது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால், டெல்டா பகுதியில் விவசாயத்தைத் துவங்கிய நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கு நிலங்களில் பயிர்கள் பாதியளவு வளர்ந்த பிறகு கருக ஆரம்பித்தன."நான் விவசாயம் செய்ய ஆரம்பித்த பிறகு, இம்மாதிரியான ஒரு சூழலை நான் பார்த்ததில்லை" என்கிறார் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவரான ரங்கநாதன்.இந்தப் பகுதியில் எத்தனை லட்சம் ஏக்கரில் விவசாயப் பணிகள் துவங்கப்பட்டன, எத்தனை லட்சம் ஏக்கரில் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் துல்லியமாக இல்லை. ஆனால், குறைந்தது நான்கு லட்சம் ஏக்கர் நிலங்களாவது பகுதி அளவிலோ, முழுமையாகவோ பாதிக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.வறண்டு போன வீராணம் ஏரிதமிழ்நாட்டின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரியை நம்பியிருந்த 48 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக கடல்போலக் காட்சியளிக்கும் வீராணம் ஏரி தற்போது வறண்டுபோய்க் கிடக்கிறது. விவசாயம் பொய்த்துப் போயிருப்பதால், தற்கொலை செய்துகொண்டும், அதிர்ச்சியினாலும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்திருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழக அரசு இதனை ஏற்கவில்லை.வேலையில்லாமல் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்கள்"விவசாயிகளின் பிரச்சனை ஒருபுறமென்றால், விவசாய தொழிலாளர்களின் பிரச்சனை மறுபுறம். லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் இந்த ஆண்டு வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். மாநில அரசு இவர்களின் பிரச்சனையில் போதிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை" என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கற்பனைச் செல்வம்.நூறு நாள் வேலைத்திட்டத்தின் நாட்கள் அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும் நடைமுறையில் அப்படி செயல்படுத்தப்படுவதில்லை என்கிறார்கள் இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள்.தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விவசாயம் செய்த பயிரைப் பொறுத்து, ஏக்கருக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடாக அறிவித்துள்ளது தமிழக அரசு. இது தவிர, காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவெல்லாம் போதாது; ஏக்கருக்குக் குறைந்தது 25 ரூபாயாவது முதலீடு செய்திருக்கும் நிலையில், அதனை மனதில் வைத்து இழப்பீடு அறிவிக்க வேண்டும் என்கிறார்கள் விவசாய சங்க நிருவாகிகள்.தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பாதி வரை வந்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருக ஆரம்பித்திருப்பதைப் பார்க்க முடிந்தது. இனி ஏதும் செய்ய முடியாத நிலையில், அவற்றில் ஆடு, மாடுகளை மேய விட ஆரம்பித்துள்ளனர். வழக்கமாக இந்த காலகட்டத்தில் இப்பகுதி விவசாயிகள் நெல் அறுவடையை முடித்துவிட்டு உளுந்து விதைப்பைத் துவங்கியிருப்பார்கள். ஆனால் சிறிய அளவில்கூட மழை பெய்யாததால், அதையும் ஒத்திப்போட்டுள்ளனர். அரசு உடனடியாக செயலில் இறங்காவிட்டால், தங்கள் நிலை மிக மோசமாகிவிடும் என்கிறார்கள் கடலூர், சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி