15 April 2014 6:21 am
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கிட்டத்தட்ட 10 லட்ச குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்படுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கின்றது. முன்னதாக அறியப்பட்ட எண்ணிக்கையை விட இது இரு மடங்காகும். உலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், காச நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதால், தேவையில்லாமல் பல குழந்தைகள் இறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காச நோய் குழந்தைகளிடம் மிக விரைவாக உருவாவதால், மேலும் திறனுள்ள கண்காணிப்பு மற்றும் பரிசோதனை முறைகளைப் பயன்படுத்துவது சிகிச்சையின் பலன்களை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்கள் காச நோயால் இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது.