26 July 2014 1:24 am
காசா-இஸ்ரேல் இடையில் மனிதாபிமான அடிப்படையிலான போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா தெரிவிக்கின்ற புதிய யோசனைகள் பற்றி விவாதிப்பதற்காக இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதேநேரம் காசா மீதான இஸ்ரேலிய ஷெல் வீச்சும் விமான குண்டுத்தாக்குதலும் தொடர்ந்துவருகின்றன. காசா மக்கள் ஒன்றரை லட்சம் பேர் தற்போது ஐநாவின் பள்ளிக்கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று காசாவிலுள்ள ஐநா மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வியாழனன்று இஸ்ரேல் ஒரு பள்ளிக்கூடத்தில் நடத்திய ஷெல் தாக்குதலில் பிள்ளைகள் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இதனிடையே காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து மேற்குக்கரையில் பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது அவர்களுக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதில் மேற்குக்கரையிலும் கிழக்கு ஜெருசலேத்திலுமாக பாலஸ்தீனர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர், நிறைய பேர் காயம் அடைந்துள்ளனர். ஆத்திரத்தை வெளிப்படுத்தும் நாளாக இந்நாள் மாற வேண்டும் எனக்கூறி பாலஸ்தீனத் தலைவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்புவிடுத்திருந்தனர். இஸ்ரேல் இம்முறை தாக்குதல்களை ஆரம்பித்ததிலிருந்து 800க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலிய தரப்பில் 32 சிப்பாய்களும் 3 சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ளனர்.