கிரானைட், கனிம மணல் கொள்ளை குறித்து சகாயம் அய்.ஏ.எஸ். விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு - தமிழ் இலெமுரியா

13 September 2014 12:40 am

தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து விசாரிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக்குழு ஒன்றை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமையன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தக்குழு இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல்செய்ய வேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சட்டவிரதமாக மேற்கொள்ளப்படும் கனிம மணல் கொள்ளை, கிரானைட் முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்திருந்தார். மதுரை மாவட்ட ஆட்சியராக ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயம் இருந்தபோது, கிரானைட் முறைகேடு விவகாரத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த முறைகேட்டினால் அரசுக்கு சுமார் 16,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் அளித்த அறிக்கை ஆகியவை குறித்தும், அவர் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்தும் தனது மனுவில் ராமசாமி குறிப்பிட்டிருந்தார். இதனால் இந்த கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவது குறித்து விசாரிக்க, சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கனிமவள முறைகேடு குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்தக்குழு இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை அளிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது சகாயம் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது குறித்தும் நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, அந்த மாவட்டத்தில் நடந்த கிராணைட் முறைகேடு குறித்து அரசுக்குக் கடிதம் எழுதினார். அதற்குப்பிறகு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டில் தமிழக அரசின் ஜவுளி விற்பனைப் பிரிவான கோ-ஆப்டெக்ஸின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார் சகாயம். அவரை இம்மாத துவக்கத்தில் இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி துறைக்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு. ஆனால், அவர் அங்கே பணியில் சேர்வதற்கு முன்பாகவே, சென்னையிலிருக்கும் அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக மாற்றி நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த பின்னணியிலேயே நீதிமன்றத்தின் இன்றைய பரபரப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி