குட்டை மாமரப் பயிரிடும் திட்டம் மன்னார் மாவட்டத்தில் துவங்கியது - தமிழ் இலெமுரியா

2 December 2015 10:05 am

வடமாகாணத்தில் புதிய முறையிலான உயரம் குறைந்த மாமரக் கன்றுகளைப் பயிரிட்டு மாம்பழ உற்பத்தி செய்யும் நடவடிக்கை மன்னார் மாவட்டத்தில் முதற் தடவையாக ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த மாம்பழப் பயிரிடும் திட்டத்தை வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தொடக்கி வைத்துள்ளார். முதற் கட்டமாக மன்னார் மாவட்டத்தில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பழமரச் செய்கையை மேற்கொள்வதற்குரிய மாங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. வட இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் கறுத்த கொழும்பான் என்ற மாம்பழ வகை நாடு முழுவதும் பிரசித்தமானது. இலங்கையில் உற்பத்தியாகும் ஏனைய மாம்பழ வகைகளிலும் பார்க்க இந்தப் பழத்தின் சுவை அலாதியானது. இதன் காரணமாகவே இந்தப் பழம் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது. புதிதாக உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள மாமரக் கன்றுகள் கறுத்த கொழும்பான் மாமரத்தைப் போன்று ஓங்கி வளரமாட்டாது என்றும் குறைந்த நிலப்பரப்பில் குறைந்த உயரத்துடன் அடர்த்தியாகப் பயிர் செய்து அதிக விளைச்சலைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் இடம் பெயர்ந்துள்ள மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேறி தமது வாழ்வாதார முயற்சிகளைப் பயனுள்ள வகையில் முன்னெடுப்பதற்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை வடமாகாண விவசாயத்துறை அமைச்சு மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி