15 February 2014 3:18 am
டெல்லி சட்டசபையில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் ஆவதில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து முதல்வர் கெஜ்ரிவால் பதவி விலகினார். முகேஷ் அம்பானியின் கைப்பாவைகளாக பாரதீயஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து டெல்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும்என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் அவசரக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு தனது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் முன் திரண்டிருந்த தொண்டர்களிடையே அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும் தாம் தவறு ஏதும் செய்திருந்தால் தம்மை மன்னிக்குமாறு கெஜ்ரிவால் கூறியபோது, அவரது ஆதரவாளர்கள், "இல்லை…இல்லை!" என்று கூறினார்கள்.