19 June 2014 1:02 am
கேதார்நாத்தில் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது இறந்தபோன 44 பேரின் எலும்புக் கூடுகள் கண்டறியப் பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெய்த கனமழை , வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏராளமானோர் பலியாகினர். இந்தப் பேரழிவில் தமிழகத்திலிருந்து சென்ற சுற்றுலாப் பயணிகளும் மாட்டித் தவித்தனர். வெள்ளத்தால் விபரீதம்: குறிப்பாக புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல பேர் காணாமல் போனார்கள். அதன்பின்னர் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு இயல்பு நிலை திரும்பியது. அதிவிரைவுப்படை தேடுதல்: ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் இறந்து வனப்பகுதியில் ஆங்காங்கே உடல்கள் கிடக்கலாம் என்று செய்தி பரவியதால் உடல்களை தேடும் பணிக்காக அதிவிரைவுப்படை அமைக்கப்பட்டது. 44 எலும்புக்கூடுகள்: 22 வீரர்கள் கொண்ட இந்த படையினர் மார்ச் மாதம் முதல் இதுவரை கேதார் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் தேடி 44 எலும்புக் கூடுகளை கண்டுபிடித்து தகனம் செய்துள்ளனர். தேடுதல் பணி தொடரும்: வனத்துறையினரின் உதவியுடன் புவியமைப்பு வரைபடத்தை வைத்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எந்த உடல்களும் கைப்பற்றப்படவில்லை என்றும் காவல்துறை தலைவர் தெரிவித்தார். எனினும், அனைத்து உடல்களும் மீட்கப்படும் வரை தேடுதல் பணி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.