18 August 2015 1:06 pm
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஆலயத் தேர் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சங்கராபுரம் வட்டம் சேஷசமுத்திரம் கிராமத்திலுள்ள மாரியம்மன் ஆலயத் தேர், வன்னியர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாகச் செல்லக் கூடாது என்று கூறியதாகவும், ஆனால் தலித் மக்கள் அதற்கு மறுத்துவிட்டதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து 15ஆம் தேதி இரவு இடம்பெற்ற வன்செயல்களின் விளைவாக ஆலயத் தேர் தீக்கிரையானதுடன், தலித் மக்களின் சில குடிசைகளும் எரிக்கப்பட்டுள்ளன என்று அப்பகுதியிலிருக்கும் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவத்தை அடுத்து அந்தக் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அங்கு பெரும் திரளான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறுகிறார். நடைபெற்றுள்ள வன்செயல்களை அடுத்து, அங்கு சென்றுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரணைகளை நடத்தியுள்ளதுடன், உடனடி நிவாரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து கிலோ அரசியும் ஐயாயிரம் ரூபா பண உதவியும் வழங்கியதாகவும் அங்குள்ள செய்தியாளர் தெரிவித்தார். எரிக்கப்பட்ட மாரியம்மன் ஆலயத் தேர் 60அடி உயரம் கொண்டது. ஆலயத் தேர் எரிக்கப்பட்டதை அடுத்து 16ஆம் தேதி நடைபெறவிருந்த ஆலயத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் நடந்த சம்பவத்துக்கு தீர்வு காணாதவரை திருவிழா நடைபெறக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த செய்தியாளர் கூறினார்.