18 August 2015 12:59 pm
சீனா தனது நாணயமான யுவானை இரண்டாவது நாளாக மதிப்பிறக்கம் செய்துள்ளது. அவ்வகையில் இரண்டு நாட்களில் யுவானின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் 3.5% குறைந்துள்ளது. எதிர்பார்த்ததை விட யுவானின் மதிப்பு மிகவும் கீழிறங்கிவிட்டது, அது மேலும் வீழ்ச்சியடைந்துவிடும் எனும் அச்சத்தின் காரணமாகவே சீன மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என இந்திய அரசின் ஓய்வு பெற்ற நிதித்துறை அதிகாரியும், தொடர்ச்சியாக சர்வதேச நிதி நிலைமைகள் குறித்து எழுதி வருபவரான கே. சுப்ரமணியம் தெரிவித்தார். சந்தை நிலவரப்படி யுவானின் மதிப்பு இருக்க வேண்டும் எனும் கொள்கையை சீனா கடைபிடித்து வரும் காரணத்தாலேயே மத்திய வங்கி இதில் தலையிட்டு, நாணயத்தின் மதிப்பை குறைத்தது எனவும் அவர் கூறுகிறார். அமெரிக்க மத்திய வங்கி இன்னும் சில வாரங்களில் தமது வட்டி வீதத்தை அதிகரிக்கக் கூடும் எனும் எதிர்பார்ப்பு இருக்கும் காரணத்தினாலும் முன்னெச்சரிக்கையாக சீனா தனது நாணயத்தின் மதிப்பைக் குறைத்துள்ளது என்றும் சுப்ரமணியம் தெரிவித்தார். யுவானின் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது, இந்தியப் பொருளாதாரத்தையும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பாதிக்கக் கூடும் எனவும் அவர் கூறுகிறார். இந்தியா சீனாவிடமிருந்து ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்வதால், இறக்குமதி செய்பவர்கள் கூடுதலாக விலை கொடுக்க வேண்டிவரும், அதே நேரம் இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை சர்வதேச விலையில் குறைந்துள்ளதாலும், இரு தரப்பிலும் இந்தியப் பொருளாதரம் பாதிக்கப்படக் கூடும் என அவர் கூறுகிறார். இதை தவிர்ப்பதற்கு இந்திய அரசும் தமது நாணயமான ரூபாயின் மதிப்பை குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், அதற்கு அரசியல் ஆதரவு இருக்குமா என்பது குறித்தும் வினா எழுப்புகிறார். பல நாடுகளில் நிதிநிலை நெருக்கடிகள் ஏற்படும்போது,அவை சர்வதேச நாணய நிதியமான ஐ எம் எஃப்பிடமிருந்து தமது தேவைகளுக்கான நிதியை டாலர்கள், பிரிட்டிஷ் பவுண்டுகள் மற்றும் யூரோக்களில் பெற்றுக் கொள்வதைப் போல, யூவானிலும் பெற்றுக்கொள்ள அந்த நிதியம் வழி செய்ய வேண்டும் என நீண்ட காலமாக சீனா கோரி வருகிறது. ஆனால் சந்தை நிலவரப்படியே யுவானின் மதிப்பு இருக்க வேண்டும் என சீனா வலியுறுத்தி வருவதை ஏற்றுக் கொள்ளவதில் ஐ எம் எஃப் தயக்கம் காட்டுகிறது எனவும் சுப்ரமணியம் கூறுகிறார்.