25 November 2015 10:37 am
தமிழகத்தில் தொடரும் மழையை அடுத்து, குடியிருப்பு பகுதிகளில் மழை நீரோடு கழிவு நீரும் கலந்து வெள்ளம் சூழ்வதால், சென்னையின் பல்வேறு இடங்களில், பொது மக்கள் நேற்று 24-11-2015 செவ்வாய்கிழமை போராட்டங்களை நடத்தினர். தமிழகத்தில் பெய்து வரும் கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் ஆங்காங்கே வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிய துவங்கியுள்ளன. அவற்றிலிருந்து வெளிவரும் உபரி நீரோடு, கழிவு நீரும் கலந்து, அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகின்றது. சில பகுதிகளில் ஆத்திரமடையும் பொது மக்கள், போராட்டங்களிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். நேற்று 24-11-2015 சென்னையில் முகப்பேர், தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் மக்கள் பெருமளவில் ஒன்று கூடி கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதற்கிடையே இன்றும் சென்னை மற்றும் மாநிலத்தின் மற்ற சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை இன்னமும் சில நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.