10 December 2013 11:06 pm
‘மைக்ரோப்’கள் எனப்படும் நுண்ணுயிர்கள் ஒருவேளை செவ்வாய்க் கிரகத்தில் வாழ்ந்திருந்தால், அவைகள் வாழ்வதற்கு வேண்டிய சூழ்நிலையைத் தந்திருக்கக்கூடிய ஒரு வறண்ட ஏரியை, செவ்வாய்க் கிரகத்தில் தற்போது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நாசா நிறுவனத்தின் க்யூரியாசிட்டி உலாவி வாகனம் அனுப்பிய புகைப்படங்களும், தகவல்களும் காட்டுகின்றன. ‘கிமோலித்தோ ஆட்டோட்ரோப்ஸ்’ என்ற இந்த நுண்ணுயிர்கள் வாழ வெளிச்சம் தேவைப்பட்டிருக்காது என்று கூறும் விஞ்ஞானிகள்,அவை, பாறைகளையும், கனிமங்களையும் உடைத்து, தாம் வாழத் தேவையான சக்தியைப் பெற்றிருக்கும் என்று கூறுகின்றனர். பூமியில், இது போன்ற நுண்ணுயிர்கள், பூமிக்கடியிலும், குகைகளிலும், கடல்களின் ஆழ்பரப்பிலும் காணப்படுகின்றன. கேல் க்ரேட்டர் எனப்படும் இந்தப் பண்டைய ஏரி, பூமியில் இருந்திருக்கக் கூடியதைப் போன்ற ஒரு ஏரிதான் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். செவ்வாய்க் கிரகத்தின் பாறைகளை பூமிக்குக் கொண்டு வந்து ஆராயாமலேயே முதன் முறையாக, அங்கு வைத்தே, அவைகளின் வயதையும் அவர்கள் கணித்துள்ளனர். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பாறைகளின் வயது நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.