30 January 2016 11:32 am
ஜப்பானில் முதல் முறையாக எதிர் வட்டிவிகிதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வர்த்தக வங்கிகள் தங்கள் இருப்பில் பணம் வைத்திருந்தால் அதற்கு -0.1 சதவீதம் என்ற அளவில் ஜப்பானின் மத்திய வங்கி கட்டணம் வசூலிக்கும். இதனால், வங்கிகள் பணம் சேமிப்பதைக் கைவிட்டுவிட்டு, கடன் கொடுக்க ஆரம்பிக்கும் என மத்திய வங்கி கருதுகிறது. இதனால், வளர்ச்சியின்றி இருக்கும் பொருளாதாரத்திற்கு உத்வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூரோ வலைய நாடுகளில் ஏற்கனவே எதிர் வட்டிவிகிதம் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், ஜப்பானில் இம்மாதிரி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பின்னடவைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டுவந்தது. இந்த வட்டிக் குறைப்பு எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்ற சந்தேகமும் நிபுணர்களிடம் இருக்கிறது.