18 November 2016 6:09 pm
தமிழ்நாட்டில் 2014ல் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்ற உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம், அது தொடர்பாக, தமிழக அரசு பதிவு செய்த சீராய்வு மனுவை இன்று தள்ளுபடி செய்தது.இதன் காரணமாக 2017ல் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து குழப்பமான சூழல் நிலவுகிறது.விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014ல் தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கடந்த ஜனவரி 8 ஆம் தேதி அனுமதி வழங்கி, விளையாட்டை நடத்துவதில் சில விதிமுறைகளை கொண்டுவந்தது.ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், இந்த ஆண்டு ஜனவரி 14-ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. பதில் மனுதாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் ஆவணங்களுடன் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹிந்தன் ஃபாலி நரிமன் ஆகியோர், ஜல்லிக்கட்டு அனுமதிக்கக்கூடியது அல்ல என்றும், தமிழக அரசின் மனு ஏற்கக்கூடியதல்ல என்று தெரிவித்தனர்.அவர்கள் , 2008ல் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம், 1960ம் ஆண்டைய மிருகவதைத் தடுப்பு சட்டத்துடன் முரண்படுவதாகவும் கூறினர்.இந்நிலையில் தமிழக ஜல்லிக்கட்டு பேரவை ராஜசேகரன் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டம் கொண்டுவர தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளின் உதவியை நாடி வருவதாகவும் தெரிவித்தார்.’2017ம் ஆண்டு பொங்கல் விழாவை ஜல்லிக்கட்டு விளையாட்டுடன் கொண்டாடப்போவதாக மக்கள் எண்ணியிருந்தனர். தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் ஜல்லிக்கட்டு பற்றி பேசப்படும் என்று நம்புகிறோம்,’ என்று பேட்டியில் தெரிவித்தார்.