16 August 2016 6:37 pm
தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான மேனகா காந்தி சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான தடையை நீக்குவதைவிட மத்திய அரசுக்கு வேறு பல முக்கியமான பணிகள் இருப்பதாகவும் தமிழகத்தில் வெகு சிலரே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வேண்டுமென கூறுவதாகவும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடையை மதிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.அதே நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், 2017ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுடன் பொங்கல் விழா நடக்குமென தெரிவித்தார். இந்த விவகாரத்தில் யார் சொல்வதையும் கேட்கும் நிலை தமிழக மக்களுக்கு இல்லையென்றும் அவர் கூறினார்.இதற்கிடையில் மேனகா காந்தி பேசியது அவரது சொந்தக் கருத்து என தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி பல மாவட்டங்களில் நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு 2014-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி தடை விதித்தது.இதற்கிடையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வகை செய்யும் விதத்தில், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி, மத்திய அரசு இந்த ஆண்டுத் துவக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டது.இதனை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி, மீண்டும் தடை உத்தரவைப் பெற்றனர்.