13 January 2016 11:17 am
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதியளித்த மத்திய அரசின் உத்தரவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பல அமைப்புகள் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என் வி ரமணா, மத்திய அரசின் ஜனவரி 7ம் தேதி ஆணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு நோட்டிஸ் வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மீண்டும் மார்ச் 15ம் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, பொங்கல் விழாவை ஒட்டி , தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற நிலையில், பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தேவையான அவசரச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கும் சாதகமான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு கடந்த 8 ஆம் தேதியன்று வெளியிட்டது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில், மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதே சமயம் இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்புக்கான கூட்டமைப்பு, விலங்குகளை அறவிதிகளுக்குட்பட்டு நடத்தக் கோரும் மக்கள் அமைப்பு போன்ற வேறு பொதுநல அமைப்புகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டார்கள். அத்தோடு உச்சநீதிமன்றம் சென்றும் அவர்கள் வழக்கு தொடுத்தனர். இவர்கள் தரப்பிலான வாதத்தில் ஜல்லிக்கட்டு ரத்தவெறி கொண்ட ஒரு விளையாட்டு என்று கூறப்பட்டது. இதே வழக்கில் ஆஜராகிய அரசு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, ஜல்லிக்கட்டை முழுமையாக தடை செய்யக் கூடாது என்றும், கிரிக்கெட் விளையாட்டில் தவறு நடந்த போது நீதிமன்றம் தலையீட்டு தவறுகளை திருத்தியது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி வாதிட்டார். இந்த வாதங்களை ஏற்காத உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் என்.வி.ரமணா ஆகியோரை கொண்ட அமர்வு, மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை வழங்கியது. மேலும் 4 வாரங்களுக்குள், மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில், இந்த விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கம் அளிக்கவும் கோரப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் பழமை வாய்ந்த விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படும் ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டும் தமிழகத்தில் கொண்டாடப்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது.