8 September 2013 4:09 am
ஜி-20 நாடுகளின் கூட்டத்தின் முதன்மையான அடிப்படை நோக்கம் என்பது உலகின் பொருளாதார ரீதியில் முன்னேறிய மற்றும் வேகமாக முன்னேறி வரும் நாடுகளின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது ஆகும். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக உலகின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும் நிலைமையை எப்படி மாற்றுவது என்பதும், மீண்டும் உலக பொருளாதார வளர்ச்சியை எப்படி ஊக்கப்படுத்துவது என்பதும் தான் இந்த ஜி-20 அமைப்பின் அடிப்படை கொள்கை, கோட்பாடு எல்லாம்.ஆனால் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நடந்து முடிந்திருக்கும் இந்த ஜி-20 மாநாட்டில் பொருளாதாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, போர் முக்கிய இடம் பிடித்தது. சிரியாவில் நடந்த ரசாயனத் தாக்குதலில் சுமார் 1500 பேர் கொல்லப்பட்டதற்கு சிரிய அரசே காரணம் என்று கூறும் அமெரிக்க அதிபர் ஒபாமா, அதற்காக சிரியா மீது கடுமையான ராணுவ நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளப் போவதாக அறிவித்தும் விட்டார். தனது இந்த நிலைப்பாட்டுக்கு, ஜி-20 நாடுகளின் ஆதரவு திரட்டுவது என்பதே அவரது பிரதான நோக்கமாக இருந்தது. அதை அவரும் அவரது அதிகாரிகளும் முழுமூச்சாக மேற்க்கொண்டனர்.சிரிய அரசின் மோசமான ராணுவ நடவடிக்கைகள் குறித்தும், அதனால் சிரிய மக்கள் படும் பேரவலங்கள் குறித்தும் ஒபாமாவும் அவரது அமெரிக்க அரசுத்துறை அதிகாரிகளும் ஜி-20 நாடுகளின் தலைவர்களுக்கும், அவர்களுடன் வந்திருந்த அதிகாரிகளுக்கும் பெரிய பெரிய விளக்கங்களை கொடுத்தார்கள். இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிரான சர்வதேச சட்டங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் இங்கே பீட்டர்ஸ்பெர்கில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அசாத் ஆட்சி தனது மக்கள் மீதே இந்த ரசாயனத் தாக்குதல்களை மேற்க்கொண்டன என்பது தான் உண்மை, என்றார் ஒபாமா.அமெரிக்க அதிபரின் ராணுவ நடவடிக்கை அவசியம் என்கிற நிலைப்பாட்டுக்கு ரஷ்யா மட்டுமல்ல, இந்தியாவும் உடன்படவில்லை. ஐநாவின் ஒப்புதல் இல்லாமல் சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு இந்தியா உடன்படவில்லை என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜி-20 மாநாட்டில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமெரிக்காவுக்கு ஜி-20 மாநாட்டில் புதிய கூட்டாளிகளோ, அதிக ஆதரவோ கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஐநாவின் அங்கீகாரமும் கிட்டவில்லை. ஐநாவின் செயலாளர் நாயகம் பான்கி மூன் அவர்களும் சிரியா சிக்கலுக்கு ராணுவ தாக்குதல் தீர்வல்ல என்று பகிரங்கமாக அறிவித்தார்."இந்த (சிரிய) பிரச்சனைக்கு ராணுவ ரீதியிலான தீர்வு என்று ஒன்று கிடையாது. அரசியல் தீர்வு மட்டுமே இந்த பிரச்சனையில் அமைதியை ஏற்படுத்தி ரத்தக்களறியை தடுக்க முடியும்", என்றார் பான்கி மூன். ஐநாவின் சார்பில் மூன் தெரிவித்த இந்த யோசனையானது அமெரிக்க அதிபரின் மனதை மாற்றுமா என்கிற கேள்விக்கு இன்றைய நிலையில் யாரிடமும் விடையில்லை."