ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு… புதிய அரசு-வழக்கறிஞரை நியமிக்க உச்சநீதிமன்றம் அனுமதி! - தமிழ் இலெமுரியா

8 September 2013 4:01 am

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் புதிய அரசு வழக்கறிஞரை கர்நாடகா உயர்நீதிமன்றத்துடன் ஆலோசித்து நியமிக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் ஏற்கெனவே இருந்த அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கி பிறப்பித்த உத்தரவை கர்நாடகா இன்று திரும்பப் பெற்றதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. 1991-96 ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்க திமுக தரப்பு கோரியது. இதையடுத்து பவானிசிங்கை கர்நாடகா அரசு திரும்பப் பெற்றது. தமது வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது கர்நாடகா உயர்நீதிமன்றம், மாநில அரசு பரிந்துரைத்த அரசு வழக்கறிஞர்கள் பட்டியலில் பவானிசிங் இல்லை என்றும் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்தன என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து பவானிசிங் நியமனம், நீக்கம் தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்ய கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது பவானிசிங்கை வாபஸ் பெற்று பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியின்றி வாபஸ் பெற்றதால் உரிய அனுமதியுடன் புதிய வாபஸ் அறிக்கை வெளியிடப்பட இருக்கிறது. விசாரணையின் முடிவில் சொத்துக் குவிப்பு வழக்கில் புதிய அரசு வழக்கறிஞரை கர்நாடகா அரசு நியமித்துக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையுடன் அரசு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி