23 January 2016 10:49 am
தமிழக மகளிர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய தலைவராக ஜான்சி ராணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் விஜயதாரணி, மாநில மகளிர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துவந்தார். இப்போது அந்தப் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் எம். ஜான்சி ராணி நியமிக்கப்படுவதற்கு அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் அளித்திருப்பதாக பொதுச் செயலாளர் ஜனார்த்தன் த்விவேதி தெரிவித்திருக்கிறார். முன்னதாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் மாநிலத் தலைவர் இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் இடையில் நேரடியாகவே வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து, இருதரப்பும் காவல்துறையில் மாறி மாறி புகார் அளித்தனர். இளங்கோவனை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கும் விஜயதாரணி கடிதங்களை அனுப்பினார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.