20 August 2013 5:59 am
இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 21 தமிழக மீனவர்களின் காவலை வரும் 16ம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 6ம் தேதி தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டி வந்ததாகக் கூறி 21 பேரை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றது. அந்த 21 பேரில் 13 பேர் மண்டபத்தைச் சேர்ந்தவர்கள், 8 பேர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள். இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட அவர்களின் காவல் முதலில் ஆகஸ்ட் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது வரும் 16ம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி கைது செய்யப்பட்ட 65 தமிழக மீனவர்களை இலங்கை விடுவிக்காவிட்டால் வரும் 10ம் தேதி முதல் தங்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டப் போவதாகவும், பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாகவும் நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.