14 November 2013 10:51 pm
தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தாம் இலங்கைக்கு வரவில்லை என்று தம்மிடம் இந்திய தலைமையமைச்சர் மன்மோகன்சிங் எதுவும் கூறவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது மகிந்த ராஜபக்சே கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் கனிந்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனிடம் கேட்பதற்கு என்னிடமும் கேள்வி இருக்கின்றது. நாட்டை பிரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோது இடமளியாது. இலங்கையிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் வெளிப்படையானவர்கள். அதனால் எம்மிடம் மறைக்க எதுவுமில்லை. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இங்கு எங்களோடு இருப்பது எனக்கு திருப்தியளிக்கிறது என்றார். அப்போது தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங், இலங்கை பயணத்தை தவிர்த்தார் என்று கூறப்படுகிறதே என இந்திய செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்சே, அப்படி ஒரு விடயத்தை இந்திய தலைமையமைச்சர் எனக்கு சொல்லவில்லையே என்றார்.