தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் - தமிழ் இலெமுரியா

16 February 2016 11:44 pm

தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ. 9,154.78 கோடி என தமிழ்நாடு சட்டப் பேரவையில் 16.02.2016 இல் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இந்த நிதி நிலை அறிக்கையில் இடைக்கால நிதியாக 60,610 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.மாநிலத்தின் வரி வருவாய் கடுமையாகக் குறைந்திருப்பதால், நிதிப் பற்றாக் குறை 9,154.78 கோடி ரூபாயாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது இடைக்கால நிதி நிலை அறிக்கை என்பதால், புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தற்போது போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக, பாட்டாளி மக்கள் கட்சி தவிர்த்த பிற அரசியல் கட்சிகள் அனைத்தும் வெளிநடப்புச் செய்தன.வெளிநடப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், இடைக்கால நிதிநிலையை அறிக்கையை தாக்கல் செய்யும் தார்மீக உரிமையை அதிமுக அரசு இழந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த நிதி நிலை அறிக்கை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையைப் புரட்டிப் பார்க்கும்போது, ஐந்தாண்டு கால இருண்ட வரலாற்றின் பக்கங்களைத் திரும்பிப் பார்ப்பதைப் போல இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசும் இந்த நிதி நிலை அறிக்கையை விமர்சித்திருக்கிறார். அவினாசி – அத்திக்கடவு திட்டம் துவங்கப்படும் என அறிவித்திருந்தாலும் நிதி ஒதுக்கப்படாததை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி