2 December 2015 10:10 am
தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் நேற்று இரவு முதல் பரவலாக மழைபெய்துவருகிறது. கடலூர், புதுச்சேரியில் பெய்துவரும் கன மழையின் காரணமாக இரண்டு இடங்களிலுமே இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடலூரில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றி வருகிறது.விமான சேவைகள் பாதிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களில் தற்போது மழை நீர் புகுந்திருந்தாலும் அவற்றை வெளியேற்ற வேண்டாமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சென்னையிலும் நேற்று இரவு முதலே கன மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் உட்புக ஆரம்பித்துள்ளது. இந்த மழையின் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்பட்டுச் செல்வதிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்த மழையின் காரணமாக தாமதமாகியுள்ளன. தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போது டிராக்டர், ஜேசிபி எந்திரங்களைப் பயன்படுத்தி வெளியேற்றப்பட்டுவருகின்றனர். நகரம் முழுவதுமே சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்து முடங்கியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளதால், அங்கிருந்து வினாடிக்கு 7,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுவருகிறது. இதனால், அடையாறு ஆற்றின் ஓரமாக வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பூண்டி ஏரியிலும் நீர் அபாய அளவை எட்டியிருப்பதால் அந்த ஏரியிலிருந்து வினாடிக்கு 18,000 கன அடி அளவுக்கு உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுவருகிறது. திருத்தணி அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவருகிறது. இதன் காரணமாக, அந்த ஆற்றின் குறுக்கே முத்துக்கொண்டாபுரம் என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த ஆற்றுப் பாலம் இன்று இடிந்து விழுந்தது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூ அணை நிரம்பிவருவதால் அந்த அணையிலிருந்து வினாடிக்கு 11,000 கன அடி அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.