31 May 2014 1:45 am
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும் கொள்முதல் மூலமும் தேவையான மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைத்து வருகிறது. தவிர, ஜூன் மாதம் முதல் காற்றாலை மின்சாரமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடந்த ஐந்து நாட்களாக தமிழ்நாட்டில் மின்வெட்டு செய்யப்படவில்லை என்று முதலமைச்சர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜுன் மாதம் முதல் கிடைக்கப்பெறும் காற்றாலை மின்சாரத்தையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின்கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 1ஆம் தேதி முதல் நீக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். உயர் அழுத்த தொழில் நுகர்வோருக்கு மாலை ஆறு மணி முதல் 10 மணிவரை 90 சதவீத மின்கட்டுப்பாடும், மற்ற நேரங்களில் அமலில் உள்ள 20 சதவீத மின் கட்டுப்பாடும் ஜூன் ஒன்றாம் தேதிமுதல் நீக்கப்படும் என முதலமைச்சர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி அமலுக்கு வந்த மின்கட்டுப்பாடுகள் அனைத்தும் இந்த அறிவிப்பின் மூலம் நீக்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது