தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம்: ஆளுனர் உரையில் அறிவிப்பு - தமிழ் இலெமுரியா

16 June 2016 9:55 pm

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரையின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 15-வது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டம் 16.06.2016 அன்று துவங்கியது. இதில் ஆளுனர் ரோசைய்யா உரை நிகழ்த்தினர். அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார். தமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்தவும் ஊழலை ஒழிக்கவும் ஏதுவாக லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என ஆளுநர் தன் உரையில் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பிரச்சனைகளில் தீர்வு காணப்படும் என்றும் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்றும் ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டிற்கும் தடையை நீக்க முயற்சி செய்யப்படும் என்றும், மாநில அரசுக்கு கூடுதல் வரி அதிகாரம் கோரப்படும் என்றும் ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமை வழங்க வலியுறுத்தப்படும் என்றும் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தப்படும் என்றும், ஆளுனர் தன் உரையில் தெரிவித்தார். மாநில அரசுக்கு அதிக வருவாய் அளிக்கும் வகையில் புதிய கிராணைட் கொள்கை வகுக்கப்படும் என்றும் கிராணைட், தாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படவிருக்கும் நிலையில், அதிலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோர தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும் ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலைக்கு புத்துயிர் ஊட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுனர் தன் உரையில் தெரிவித்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி