தமிழ் மக்கள் எதிர்ப்பால் தமிழக திரையரங்குகளிலிருந்து வெளியேறியது ‘இனம்’ - தமிழ் இலெமுரியா

15 April 2014 6:26 am

தமிழ்த் திரைப்படமான ‘இனம்’ உண்டாக்கிய அரசியல் சர்ச்சை காரணமாக இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டின் அனைத்து திரையரங்குகளில் இருந்தும் திரும்பப்பெறுவதாக அதன் விற்பனையாளர் பிரபல திரைப்பட இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார். தமக்கு இதனால் பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டாலும் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெறுவதாக அவர் கூறியிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரைக் கதைக்களமாக கொண்டு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமான ‘இனம்’, மார்ச் மாதம் 28ஆம் தேதி  தமிழகத்தில் திரையிடப்பட்டது. இப்படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தே, ஒரு சில ஈழத்தமிழர் ஆதரவு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்தகைய எதிர்ப்புக்களை சமாளிக்கும் விதமாக அந்த திரைப்படம் தமிழ்த் திரைத்துறையை சேர்ந்த முன்னணி பிரமுகர்களுக்கு பிரத்தியேகமாக திரையிட்டு காட்டப்பட்டது.அப்படியாக இந்த படத்தை பார்த்த தமிழ் திரையுலக பிரமுகர்களில் கவிஞர் வைரமுத்து, தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்க செயாளார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் எஸ்.ஜெ.சூர்யா, இயக்குனர் வசந்தபாலன், இயக்குனர் சசி, இயக்குனர் எம்.ராஜேஷ், நடிகர் சித்தார்த், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம், ஈழத்தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சில குறிப்பிட்ட காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்கள் சுட்டிக்காட்டிய காட்சிகளை அகற்றி பின்னர் இந்த திரைப்படம் வெளியிடப்படும் என்று இயக்குனர் லிங்குசாமி அறிவித்தார். அதன்படி, ‘இனம்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட, பள்ளிக்கூட காட்சி, புத்தத் துறவி தமிழ்க்குழந்தைகளுக்கு மாதுளம் பழம் கொடுக்கும் காட்சி, சிங்கள ராணுவ சிப்பாய் குழந்தையின் புகைப்படம் வைத்திருக்கும் காட்சி, தலைவர் கொல்லப்பட்டார் என்கிற ஒரு வசனம் கொண்ட காட்சி மற்றும் திரைப்படத்தின் இறுதியில் 38,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்கிற தகவல் பலகை காட்சி ஆகிய ஐந்தும் நீக்கப்பட்டுள்ளதாக லிங்குசாமி தெரிவித்திருந்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், இந்த திரைப்படத்தை மிக கடுமையாக விமர்சித்து இந்த திரைபடத்தை வெளியிட வேண்டாம் என தமிழக திரையரங்குகளிடம் கோரியிருந்தார். இப்படியாக ‘இனம்’ திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் தொடருவதை வந்ததை அடுத்து, படத்தின் வெளியிட்டாளர் இயக்குனர் லிங்குசாமி இந்த படம் மார்ச் 31ஆம் தேதி முதல் தமிழக திரையரங்குகள் அனைத்திலும் இருந்தும் முழுமையாக திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் குறித்து பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன், உணர்வுபூர்வமான இலங்கை இனப் பிரச்சினையை முடிந்தவரை நடுநிலையாகச் சித்தரிக்க தான் முயன்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி