16 August 2014 7:06 am
திட்டக் குழுவை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் யெச்சூரி கூறியதாவது: பிரதமர் இன்னமும் தேர்தல் மனோபாவத்திலேயே இருக்கிறார். அவரது உரை தேர்தல் பிரசாரத்தைப் போலவே உள்ளது. திட்டக் குழுவை நீக்க அரசு எடுத்துள்ள முடிவு நாட்டின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். திட்டக் குழுவை கலைக்கப் போவதாக மோடி பேசியுள்ளதற்கு ஆம் ஆத்மி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவரான யோகேந்திர யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், திட்டக் குழுவை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக மற்றொரு அமைப்பை உருவாக்கப் போவதாக பிரதமர் அறிவித்துள்ள நடவடிக்கை நாட்டுக்கு ஆபத்தானது. கொள்கைகளையும் திட்டங்களையும் பரிசீலிப்பதற்கான ஒரு களத்தை அது முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்றார்.