19 July 2016 5:05 pm
அரித்வாரில் திருவள்ளுவர் சிலையை அகற்றியது நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என்று பாஜக அமைச்சர் தருண் விஜய் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் அரித்வாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். கடந்த 29-ந் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடக்கிறது. திருவள்ளுவருக்கு நேர்ந்த இந்த அவமரியாதைக்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்பி தருண் விஜய் கூறுகையில், திருவள்ளுவர் சிலையை அகற்றியது சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் முயற்சி. மேலும் அவருக்கு மிகப் பெரிய அவமானம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. உத்தரகாண்ட் அரசிடம் முறையான அனுமதி பெற்ற பின்பே சிலையை நிறுவ முயற்சிகள் எடுக்கப்பட்டது. சிலையை அகற்ற முயற்சித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல் ஹரித்துவார் மாவட்ட ஆட்சித் தலைவர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். சிலை மீண்டும் உரிய மரியாதையுடன் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும். இது தொடர்பாக உத்தரகாண்ட் ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு விரைவில் கடிதம் எழுத உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.