14 August 2016 12:26 pm
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 41.சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு முறை வென்றவர் கவிஞர் முத்துக்குமார்.காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் ஜூலை 12, 1975-ம் ஆண்டு பிறந்தவர் நா முத்துக்குமார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் கல்விப் படிப்பை முடித்தவர், ஆரம்ப நாட்களிலிருந்தே எழுவதில் நாட்டம் கொண்டார். பிரபல இயக்குநர் மறைந்த பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் மூலம் வீரநடை படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பிறகு ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்கள் அத்தனைப் பேருடனும் பணியாற்றியவர் நா முத்துக்குமார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார், ஹாரிஸ் ஜெயராஜ் என அத்தனைப் பேருடனும் மிகவும் நட்பாகவும் இணக்கமாகவும் இருந்தவர் நா.முத்துக்குமார்.குறிப்பாக யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷுக்கு மிக நெருக்கமான நண்பராகத் திகழ்ந்தார்.யுவன் சங்கர் ராஜா இசையில் தங்க மீன்கள் படத்துக்காக இவர் எழுதிய ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்… ’ பாடலுக்கு முதல் தேசிய விருதினை வென்றார்.அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே… பாடலுக்காக இரண்டாவது தேசிய விருதினை வென்றார்.தொடர்ந்து பத்தாண்டுகள் தமிழ் சினிமாவின் முதன்மை பாடலாசிரியராகத் திகழ்ந்தார் நா.முத்துக்குமார்.சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றவர், அங்கு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்று தன் பொறுப்பை நிறைவேற்றினார்.மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். நா.முத்துக்குமாருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.