தீவிரவாதியிடமிருந்து வாடிக்கையாளர்களைக் காத்த பாரிஃசு சூப்பர் மார்க்கெட்டின் முஸ்லீம் ஊழியர்! - தமிழ் இலெமுரியா

12 January 2015 11:45 am

பாரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் புகுந்து அங்கிருந்தவர்களை ஒரு மர்ம நபர் சிறை பிடித்தபோது, அந்த நிறுவனத்தின் ஊழியர் தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர்களை தீவிரவாதியின் பிடியில் சிக்காமல் மறைத்து வைத்து காப்பாற்றியுள்ளார். அந்த ஊழியர் ஒரு முஸ்லீம் என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிகின்றன.  பாரீஸின் போர்ட் டி வின்செஸ் என்ற பகுதியில் உள்ள ஹைபர் கோஷர் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த தீவிரவாதி ஒருவன், அங்கிருந்தவர்களை சிறை பிடித்து பல மணி நேரம் பெரும் பீதியை ஏற்படுத்தி விட்டான். இறுதியில் அவனை போலீஸார் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர். வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின்போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான செயல் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் லசன்னா பதிலி என்ற 25 வயது முஸ்லீம் இளைஞர் வேலை பார்த்து வருகிறார். இவர் மாலி நாட்டைச் சேர்ந்தவர். பிரான்சில் வசித்து வரும் இவர் பாரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் பகுதி நேர வேலையாளராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் பணியில் இருந்த போதுதான் தீவிரவாதி புகுந்து விட்டான். இதையடுத்து தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர்களை முடிந்த வரை காப்பாற்ற முடிவு செய்த லசன்னா, அவர்களில் பலரை குளிர் சாதன சரக்கு இருப்பு வைக்கும் அறைக்குள் தள்ளி மூடியுள்ளார். இதனால் பலர் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.  இது குறித்து லசன்னா அளித்துள்ள ஒரு பேட்டியில், 15 பேரை நான் காப்பாற்றினேன். பின்னர் அவர்களை மறைத்து வைத்த இடத்தில் மின்சாரத்தையும் அணைத்து விட்டேன். அனைவரையும் அமைதியாக இருக்குமாறும், சத்தம் போடாமல் இருக்குமாறும் கூறினேன். இல்லாவிட்டால் தீவிரவாதி நம்மை நோக்கி வந்து விடுவான் என்றும் அவர்களை எச்சரித்தேன். நான்கு மணி நேரம் நாங்கள் இப்படி முடங்கிக் கிடந்தோம். பின்னர் அங்கிருந்து ஒரு லிப்ட் மூலம் வேறு பகுதிக்கு தப்ப முடிவு செய்தேன். என்னோடு அனைவரையும் பத்திரமாக அழைத்துச் செல்லவும் முயன்றேன்.  ஆனால் அவர்கள் பயந்து கொண்டு வர மறுத்தனர். இதனால் நான் மட்டும் தப்பி வந்தேன். அப்போது தீவிரவாதி உள்ளேதான் இருந்தான். நான் வெளியே வந்தபோது போலீஸார் என்னை தலை குனியுமாறும், கைகளை மேலே தூக்குமாறும் கூறினர். எனக்குக் குழப்பமாகி விட்டது. என்னைத் தீவரவாதி என்று அவர்கள் நினைத்து விட்டார்கள். மேலும் எனக்குக் கைவிலங்கிட்டு ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்படி வைத்திருந்தனர். ஆனால் நான்தான் கடைக்குள் நடந்ததை அவர்களிடம் விளக்கி, தீவிரவாதி எந்த இடத்தில் இருக்கிறான், எப்படிப் போக வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கினேன். அதன்படியே போலீஸாரும் உள்ளே புகுந்து அவனை சுட்டுக் கொன்று அனைவரையும் மீட்டனர். அதன் பின்னர் நான் ஒளித்து வைத்திருந்தவர்களும் மீண்டு வந்த போது என்னை பாராட்டி விட்டுச் சென்றனர். தற்போது இணையதளங்களில் லசன்னாவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி