11 January 2015 6:37 pm
தேர்தலில் தோல்வி உறுதியானதைத் தொடர்ந்து ராணுவத் தளபதி மற்றும் காவல்துறை ஐஜி ஆகியோரின் உதவியுடன் தேர்தல் முடிவை புறக்கணித்து விட்டு ஆட்சியில் தொடர ராஜபக்சே செய்த சதிச் செயல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் செய்தித் தொடர்பாளர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மங்கள சமரவீரா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளதாக மக்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அப்படி நடக்கவில்லை. மாறாக திரைமறைவில் ராஜபக்சே பெரும் சதிச் செயலை அரங்கேற்ற திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. தேர்தலில் தனது தோல்வி உறுதியானதும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் நீடிக்க அவர் ராணுவத் தளபதி மற்றும் போலீஸ் தலைவரின் உதவியைக் கோரியுள்ளார். தேர்தலையே செல்லாது என்று அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக நாட்டின் சட்ட அமைச்சகத்தின் உதவியையும் அவர் நாடியுள்ளார். ஆனால் இந்த மூன்று பேருமே அவருக்கு உதவ முன்வரவில்லை. இதனால் அவருடைய சதிச் செயல் அரங்கேறாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசு விசாரணை நடத்தும் என்றார் சமரவீரா. முதலில் காவல்துறை ஐஜி இலங்கக்கூனின் உதவியை நாடியுள்ளார் ராஜபக்சே. ஆனால் அவர் முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம். அவருக்கு ஆதரவாக ராணுவத் தளபதி தய ரத்னாயகேவும் மாறியுள்ளார். சட்ட அமைச்சகமும், அப்படிச் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று ராஜபக்சவை எச்சரித்து விட்டதாம். தனக்கு ஆதரவாக ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸாரை வைத்துக் கொண்டு, தேர்தலை செல்லாது என்று அறிவித்து தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க ராஜபக்சே திட்டமிட்டதாக தெரிகிறது. இதை எதிர்ப்போரை சிறையில் தள்ளவும், அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு ஆதரவாக ராணுவமும், போலீஸும் வரவில்லை. இதனால் ராஜபக்சேவின் கடைசி நேர சதித் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. மேலும் இதுகுறித்து அறிந்த ரணில் விக்கிரமசிங்கே ராஜபக்சேவை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு நல்லதனமாக விலகுவதே சரியானது. உங்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன். அமைதியாக விலகி விடுங்கள் என்று அறிவுரை கூறினாராம். இதைத் தொடர்ந்தே தோல்வியை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து விட்டு அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினாராம் ராஜபக்சே. சமரவீரா மேலும் கூறுகையில், ராஜபக்சேவுடன் சில உலகத் தலைவர்களும் பேசி அவரை அமைதியான முறையில் விலகுவதே நல்லது என்று அறிவுரை கூறியுள்ளனர். யார் அவரிடம் பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சில தலைவர்கள் பேசியது எனக்குத் தெரியும் என்றார்.