1 March 2016 1:42 pm
அரசியல் தலைவர்கள் வருகைக்காக பல கட்டடங்கள் திறக்கப்படாமலேயே பாழடைந்து போன சரித்திரத்துக்கு சொந்தமான இடம் தமிழ்நாடு. ஆனால் இந்த மண்ணில்தான் நூலகம் கோரி மனு கொடுத்த மாணவியையே அந்த நூலக கட்டடத்தை திறந்து வைக்கும் சிறப்பு விருந்தினராக்கியிருக்கிறார் ஒரு எம்.எல்.ஏ. என்றால் ஆச்சரியம் அல்லவா? பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சிவசங்கரிடம் 2 ஆண்டுகளுக்கு முன் அவரது தொகுதிக்கு உட்பட்ட கொள்ளப்பாடி கிராமத்துக்கு ‘மக்கள் சந்திப்பு’ என்ற நிகழ்ச்சிக்காக சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் கிளம்பிய சிவசங்கரிடம் 8-ம் வகுப்பு படித்து வந்த செம்பருத்தி என்ற மாணவி, இங்கு கட்டப்பட்டுள்ள நூலகத்தை யாரும் திறக்கவில்லை. நீங்கள் கொஞ்சம் சொல்லி திறக்க சொல்லுங்க சார் என மனு கொடுத்தார். இதைப்பற்றி சிவசங்கர் விசாரித்தபோது, அந்த நூலகம் பகுதிநேர நூலகம் என்பதும், தற்போது தனியார் அலுவலகத்தில் செயல்படுவதால் அதை முறையாக திறக்க முடியவில்லை எனவும் தெரியவந்தது. இதன் பின்னர் அந்த நூலக மேம்பாட்டுக்காக சிவசங்கர் தமது எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி கொள்ளப்பாடியில் கிளை நூலகம் ஒன்றை கட்ட ஏற்பாடு செய்தார். இந்த நூலகம் நேற்று முன் தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் தங்கள் ஊருக்கு நூலகம் வேண்டும் என கோரிக்கை வைத்த தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியான செம்பருத்தியே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி நூலகத்தை திறந்து வைத்தார். அதுமட்டுமல்ல, நூலக கட்டட திறப்பு விழாவிலும் சிறப்பு விருந்தினர்: செல்வி. செம்பருத்தி (எட்டாம் வகுப்பு மாணவி) மனு கொடுத்தவர் எனப் போட்டு அசத்திவிட்டார் சிவசங்கர். கல்வெட்டை செம்பருத்தி திறந்தபோது அதிசயித்து போனார். அந்த கல்வெட்டில், ‘நூலகம் திறப்பாளர்- மாணவி செம்பருத்தி, நூலகம் தங்கள் ஊருக்கு வேண்டும் என கோரிக்கை வைத்தவர்’ என பொறிக்கப்பட்டிருந்தது.