14 November 2013 10:47 pm
தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த முற்றத்தை கடந்த 6 –ந் தேதி உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து கடந்த 8, 9, மற்றும் 10 ஆகிய நாட்களில் முற்றத்தின் தொடர் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இந்நிலையில் கடந்த 13 – ந் தேதி அதிகாலை 5 மணி அளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர் மற்றும் பூங்கா இடிக்கப்பட்டது. முற்றம் இடிக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர்கள் மற்றும் சமூக அமைப்பினர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுச் சுவரை இடித்த இடத்தில் அங்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சார்பில் கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதனை பொது மக்கள் மற்றும் பல்வேறு கட்சி அமைப்பினர்கள் அகற்றினர். இது தொடர்பாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், அயனாபுரம் முருகேசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, ம.தி.மு.க. தலைமை நிலைய பேச்சாளர் விடுதலை வேந்தன், தமிழ்தேச பொதுவுடைமைக் கட்சியை சேர்ந்த குழ. பால்ராஜ், விடுதலை தமிழ்புலிகள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, மள்ளர் மீட்பு கழகத்தை சேர்ந்த செந்தில் உள்ளிட்ட 82 பேர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தஞ்சை தாலுகா போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுச் செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 82 பேருக்கும் ஜாமீன் கேட்டு தஞ்சை வழக்குரைஞர் வடிவேல் தஞ்சை மாவட்ட ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மூர்த்தியிடம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் மூர்த்தி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து பழ. நெடுமாறன் உட்பட 82 பேருக்கும் மீண்டும் ஜாமீன் கேட்டு தஞ்சை மாவட்ட முதலாவது அமர்வு நீதி மன்றத்தில் வழக்குரைஞர் வடிவேல் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிய வருகிறது.