7 January 2014 5:36 am
பாலியல் புகார் சுமத்தப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி,ஏ.கே.கங்குலி, தான் வகிக்கும் மனித உரிமை குழுவின் தலைமை பதவியிலிருந்து விலகினார். ஒரு பயிற்சி வழக்கறிஞரிடம் பாலியல் தொந்தரவு அளித்ததாக நீதிபதி ஏ.கே.கங்குலி மீது குற்றம் சுமத்தப்பட்டது. அந்த குற்றத்தை அவர் மறுத்து வருகிறார். கடந்த மாதம் இந்த குற்றச்சாட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த குழு, நீதிபதி கங்குலியின் தவறான நடத்தைக்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் கங்குலி ஓய்வு பெற்றுவிட்டார் என்ற காரணத்தைக் காட்டி, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. இது குறித்து நீதிபதி கங்குலி கருத்து தெரிவிக்க மறுத்தாலும், இது சரியான முடிவு என்று முன்னாள் தலைமை அரச வழக்கறிஞர் சோலி சோரப்ஜி தெரிவித்துள்ளார். "என்னுடன் உரையாடிய ஒரு நாளைக்கு பிறகு அவர் பதவி விலகியது நல்ல விஷயம்",என்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் சோரப்ஜி தெரிவித்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏ.கே.கங்குலி மேற்கு வங்காள மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். பாலியல் புகாரை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவிடம் பயிற்சி வழக்கறிஞர் அளித்த வாக்குமூலத்தை கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி அன்று ஒரு இந்திய பத்திரிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து முன்னாள் நீதிபதி பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் துவங்கியது. அந்தக் கட்டுரையில், டெல்லி ஹோட்டலில் கங்குலி தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பயிற்சி வழக்கறிஞர் ஸ்டெல்லா ஜேம்ஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்தப் பயிற்சி வழக்கறிஞரை தனது அறைக்கு வந்து மது அருந்தி ஓய்வு எடுக்குமாறு கங்குலி அழைத்ததாகவும், அவரை விட்டு விலகிச் செல்ல முயற்சித்த போது , அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அந்த பெண் தெரிவித்தார். 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம் குறித்து கடந்த நவம்பர் மாதம் ஸ்டெல்லா ஜேம்ஸ் இணைய வலைப்பூ பதிவில் எழுதியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளும், இந்தியாவில் பாலியல் வன்கொடுமையால் இறந்த பெண்ணிற்காக டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நேரத்தில் இது நடந்தது என்பதும், இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.