பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை காலமானார். - தமிழ் இலெமுரியா

11 November 2013 1:03 am

திருநெல்வேலியைச் சேர்ந்தவரான புஷ்பா தங்கதுரை, சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தார். உடல் நலக் குறைவு காரணமாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை (நவ.10) மாலை காலமானார்.புஷ்பா தங்கதுரையின் இயற்பெயர் எஸ்.வேணு கோபாலன். 300-க்கும் மேற்பட்ட நாவல்கள்: சமூக நாவல்களை புஷ்பா தங்கதுரை என்ற பெயரிலும், சரித்திர நாவல்கள் மற்றும் ஆன்மிகம் தொடர்பான நூல்களை ஸ்ரீ வேணு கோபாலன் என்ற பெயரிலும் அவர் எழுதி வந்தார். தமிழ், ஆங்கிலம், சம்ற்கிருதம், மலையாளம், பிரெஞ்ச், இந்தி என பன்மொழி வல்லுநராகவும் அவர் திகழ்ந்தார். சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 300-க்கும் அதிகமான நாவல்களும், 100-க்கும் மேற்பட்ட கவிதைகளும் எழுதியுள்ளார்."திருவரங்கன் உலா’, "மதுரா விஜயம்’, "மோகினி திருக்கோலம்’, "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது", "என் பெயர் கமலா’, "காதல் அல்லாத காதலி’ போன்றவை அவரின் குறிப்பிடத்தக்க நூல்கள் ஆகும்.திரைப்பட கதாசிரியர்: "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’, "நந்தா என் நிலா’, "ஜூன் 16′ ஆகிய அவரின் கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இதில் "ஜூன் 16′ என்ற படத்துக்கு திரைக்கதை- வசனத்தையும் அவரே எழுதினார். "பெண் ஜீவநதி’, "ஊரார்’, "நான் குடும்பத்து ஸ்டார்’ போன்ற அவரின் கதைகள் தொலைக்காட்சி தொடர்களாக தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டன."ஊதாப்பூ’, "ஆன்மிகம்’ போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்துள்ளார். 1949-ஆம் ஆண்டு எழுதத் தொடங்கிய அவர், இறுதிக்காலம் வரை எழுதிக் கொண்டிருந்தார். "மதுரகவி’ நாடகத்துக்காக மத்திய அரசின் கலாசார விருது, அமுதசுரபி நாவல் பரிசு, சாவியின் 10-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது உள்பட ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி